இன்று சட்ட்சபையில் 110-ன் கீழ் ஒரு அறிக்கை வாசித்த முதல்வர் அதில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், நிலைத்த வேலைவாய்ப்புகளை அளிப்பதிலும், தொழில் முனைவோர் மேம்பாடு
அடைவதற்கும் நாற்றங்காலாக விளங்குவது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை என்று சொன்னால் அது மிகையாகாது.
இப்படிப்பட்ட இன்றியமையாத்தன்மை வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்துவரும் எனது தலைமையிலான அரசு, தொழில் முனைவோரை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வழங்க உள்ள சிறப்புச் சலுகைத் தொகுப்பினை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
(1) தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைக்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்படும் குறுந்தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து வட்டாரங்களிலும் அமைக்கப்படும்
வேளாண் சார் குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு, அவற்றின் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களின் மொத்த மதிப்பில் 15 விழுக்காடு என்ற அளவில் தற்போது வழங்கப்பட்டு வரும் மானியம் இனி 25 விழுக்காடாக அதிகரித்து வழங்கப்படும். வழங்கப்படும் மானியத்தின் உச்ச வரம்பு 30 லட்சம் ரூபாய் என இருக்கும்.
(2) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில், புதிய தொழிற்பேட்டைகளை அமைக்கும் பொருட்டு, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலமாக, சுமார் 2000 ஏக்கர் பரப்பிலான நில வங்கி படிப்படியாக உருவாக்கப்படும்.
(3) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்களின் அருகில் அமையும் வாய்ப்பை பெற்று ஒருங்கிணைந்த பயன் பெறும் வகையில், பெரிய நிறுவனங்களுக்காக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்படும் தொழிற்பேட்டைகளில் உள்ள மொத்த நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 20 விழுக்காடு நிலம் ஒரே தொகுப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு உரிய நிலக்கிரய விலையில் வழங்கப்படும்.
இவ்வாறு பெறப்படும் நிலத்தை தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேம்படுத்தி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுமட்டுமல்லாமல், சிறு தொழில் முனைவோர் விரைவாக தொழில் துவங்கும் வகையில், 5,000 சதுர அடிக்கு மேற்பட்ட தொழிற்கூடங்களை ஒதுக்கீடு செய்ய அரசின் அனுமதி பெறவேண்டும் என்ற நிலையை மாற்றி, 50 சென்ட் வரையிலான தொழிற்கூடங்களை ஒதுக்கீடு செய்ய சிட்கோ நிறுவனத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்படும்.
(4) நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்கூடங்கள் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு மாசுகளை ஏற்படுத்துகின்றன. நகர்ப்புறத்தில் உள்ள இடநெருக்கடி காரணமாக தொழிற்கூடங்களை விரிவுபடுத்தவும் இயலாத சூழ்நிலை உள்ளது.
எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், தொழிற்கூடங்களை விரிவுபடுத்தும் நோக்கிலும், ஏற்கெனவே, நகர்ப் பகுதிகளில் ஆங்காங்கே அமைந்துள்ள தொழிற்கூடங்களை மாற்றி அமைத்து நகருக்கு வெளியே தொழிற் குழுமம் மற்றும் தொழிற் பேட்டைகளை உருவாக்க தனியார் தொழில் முனைவோர் அமைப்புகள் முன் வரும் பட்சத்தில், மின் இணைப்பு வழங்குதல், நீர் வழங்குதல், காட்சி, கருத்தரங்க கூடங்கள், விற்பனை வசதி மையங்கள் முதலிய அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் பொது வசதிகவீளை ஏற்படுத்த அரசு மானியம் 75 விழுக்காடு என்ற அளவில் அதிக பட்சமாக 15 கோடி ரூபாய் வரை வழங்கப்படும்.
இதேபோல், தனியார் தொழில் முனைவோர் அமைப்புகள் புதிய தொழில் நிறுவனங்களுக்கென புதிய தொழிற் குழுமம் மற்றும் தொழிற்பேட்டை அமைக்க முன் வரும் பட்சத்தில் அரசு மானியம் 50 விழுக்காடு என்ற அளவில் அதிக பட்சமாக 10 கோடி ரூபாய் வரை வழங்கப்படும்.
(5) தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நடைமுறையில் உள்ள நில விலை நிர்ணயமுறை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உகந்த வகையில் சீரானதாகவும் நிலையானதாகவும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போதுள்ள முழு விலை விற்பனை மற்றும் தவணை முறை விற்பனை ஆகியவற்றை மாற்றி அமைத்து தொழில் வளர்ச்சிக்கு உகந்த லாப நோக்கமற்ற விலை நிர்ணயக் கொள்கை உருவாக்கப்படும்.
அரசு மற்றும் சிட்கோ தொழிற் பேட்டைகளில் தொழில் மனைகள் மற்றும் தொழிற்கூடங்களை 30 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் வழங்கிடவும், 30 ஆண்டு கால முடிவில் தொழில் முனைவோருக்கு முழு கிரய விலையில் வாங்கவும் வாய்ப்பளிக்கப்படும்.
(6) புதிய தொழிற்பேட்டைகளை அமைப்பதில் தகுதியான தனியார் மற்றும் அரசு நிலங்களை தேர்வு செய்து பெறுவதிலிருந்து நிலவரை படம் ஒப்புதல் பெற்று ஒதுக்கீடு செய்யும் வரை உள்ள பல்வேறு நிலைகளில், பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து தடையின்மைச் சான்று மற்றும் ஒப்புதல்களை பெற வேண்டியுள்ளதால் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் பொருட்டு, தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான ஒற்றைச் சாளர தீர்வுக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும்.
(7) தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை முக்கிய நோக்கமாக கொண்டு பல்வேறு இடங்களில் தொழிற் பேட்டைகளை உருவாக்குதல், மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தனது சொந்த நிதி மட்டுமல்லாமல் மாநில மற்றும் மத்திய அரசு வழங்கும் மானியத்தை பயன்படுத்தி வருகிறது.
சிட்கோ நிறுவனத்தின் நிதி ஆதாரத்தை மேலும் பலப்படுத்தி சிறு தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சிட்கோ நிறுவனத்திற்கு கூடுதலாக 16 கோடி ரூபாய் அரசின் பங்கு மூலதனமாக வழங்கப்படும்.
(8) சென்னைப் பெரு நகரை ஒட்டியுள்ள பகுதிகளில், நிலத்தின் விலை அதிகமாக உயர்ந்து வருவதாலும், தொழிற்பேட்டைகள் துவங்க போதுமான காலி இடங்கள் இல்லாததாலும், தற்போதுள்ள தொழிற் பேட்டைகளை விரிவுபடுத்த போதிய இடம் இல்லாததாலும், சிறு தொழில் முனைவோர், தொழிற் கூடங்களை அமைக்க உதவும் வகையில், அடுக்கு மாடி தொழில் வளாகங்களை, அமைத்துத் தர எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
முதற் கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் சிறு தொழில் முனைவோருக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் குறுந்தொழில் கூடங்களை ஒதுக்கும் பொருட்டு 20 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம் ஒன்று சிட்கோ நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும்.
(9) தமிழ்நாடு அரசின் தொலை நோக்குப் பார்வை 2023ல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கினை எய்தும் வகையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையிலும், தொழில் நுட்பம் சார்ந்த தொழில் முனைவு மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை பல்வேறு தொழில் குழுமங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், மூலம் வழங்கிட எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், சுயதொழில் நடத்தி வரும் மகளிர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மகளிர்க் கென சிறப்பு பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இந்தப் பயிற்சித் திட்டங்களை செயல்படுத்த நடப்பாண்டில் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு 5 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கப்படும்.
(10) கூட்டு முயற்சியினை ஊக்குவிக்கும் வகையில், தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவன அமைப்புகள் தொழிற்பேட்டைகளை ஆரம்பிக்க முன் வந்தால், சிட்கோ நிறுவனம் அவற்றுடன் இணைந்து 10 விழுக்காடு வரை மூலதனத்தைச் செலுத்தி புதிய தொழிற் பேட்டைகளை உருவாக்கும். மேற்காணும் நடவடிக்கைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் பயன் பெறவும், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. (டி.என்.எஸ்)
No comments:
Post a Comment