Saturday, September 21

வாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் தொழில்



என்னதான் குறுஞ்செய்திகளிலும், மின் அஞ்சல்களிலும் வாழ்த்து பரிமாறிக்கொண்டாலும், வாழ்த்து அட்டை கைகளில் கிடைக்கிறபோது, அது கொடுக்கிற சுகானுபவமே தனி! அதையும் நம் கைப்பட தயாரித்து, நாலு வரி எழுதிக் கொடுத்தால் விதம் விதமான வாழ்த்து அட்டைகள் தயாரிக்கக் கற்றுக்கொடுக்கிறார் சென்னையைச் சேர்ந்த சுதா செல்வக்குமார்.

‘‘படிச்சது எம்.காம். ஈவினிங் காலேஜ்ல படிச்சதால, பகல் நேரத்தை வீணாக்க வேண்டாமேனு நிறைய கைவினைக் கலைகள் கத்துக்கிட்டேன். கிட்டத்தட்ட 100 வகைகள் செய்யத் தெரியும். அதுல ஒண்ணுதான் கிரீட்டிங் கார்டு பண்றது. சும்மா அட்டையை வெட்டினோமா, ஒட்டினோமானு இல்லாம, விதம் விதமான டிசைன்கள்ல, விதம் விதமான மாடல்கள்ல பண்றேன்’’ என்கிற சுதா, ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை முதலீடு

‘‘சார்ட் பேப்பர், ரீசைக்கிளிங் பேப்பர், ஒயிட் கம், சாட்டின் ரிப்பன், லேஸ், குட்டிக்குட்டி ஸ்டிக்கர்ஸ், குவில்லிங் கார்டுகள், பார்ச்மென்ட் கார்டுகள் செய்ய தனித்தனியான பேப்பர் மற்றும் டூல்ஸ், பன்ச்சிங் கார்டுகளுக்கு பன்ச்சிங் மிஷின், ரெடிமேடா கிடைக்கிற வாசகங்கள், கவர்கள், இது தவிர அலங்காரப் பொருள்கள்... அவங்கவங்க தேவை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து 500 ரூபாய்லேர்ந்து 3 ஆயிரம் வரைக்கும் முதலீடு போடலாம். எல்லா அயிட்டங்களும் சாதாரண ஸ்டேஷனரி கடைகள்லயோ, சென்னை பாரிஸ்ல மொத்தவிலைக் கடைகள்லயோ கிடைக்கும்.’’

எத்தனை மாடல்

‘‘சாதா சார்ட் பேப்பர்ல பண்ற வகை, ரீசைக்கிளிங் அல்லது ஹேண்ட்மேட் பேப்பர்ல பண்ற வகை, டெகோ பேஜ் கார்டு, கல்யாண கார்டு, ஆரிகமி கார்டு, எம்போசிங் கார்டு, பெயின்டிங் கார்டு, பன்ச்சிங் கார்டு, பார்ச்மென்ட் கார்டு, குவில்லிங் கார்டு... இப்படி நிறைய இருக்கு.’’

ஒரு நாளைக்கு எத்தனை அட்டை

‘‘ஒரு கார்டு பண்ண 10 நிமிஷம் போதும். டிசைனுக்கேத்த கட்டிங்கெல்லாம் பயிற்சி வகுப்புலயே கொடுக்கப்படும். அதை வச்சு வெட்டி, அலங்கரிக்க வேண்டியதுதான்.’’

விற்பனை வாய்ப்பு லாபம்

‘‘இப்பவும் கார்டு அனுப்புற கலாசாரம் நிறைய பேருக்கு இருக்கு. சாரி சொல்லவும், உடம்புக்கு முடியாதவங்களுக்கு ஆறுதல் சொல்லவும்கூட கார்டு அனுப்புறாங்க. பெரிய கடைகள்ல கார்டு விற்பனை நல்லாவே போயிட்டிருக்கு. 30 ரூபாய் செலவு பண்ணி உருவாக்கிற கார்டை, 60 ரூபாய் வரை விற்கலாம். அளவையும் டிசைனையும் பொறுத்து 500 ரூபாய்க்கு கூட கார்டுகள் இருக்கு.’’

.................................................................................................................................................................
சிவகாசி பகுதியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளது. இந்த அச்சகங்களில் பல்வேறு வகையான அச்சுப்பணிகள் நடந்து வருகிறது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அச்சகங்களில் காலண்டர், டைரி பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது.
இதேபோல் இங்குள்ள சில அச்சகங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், காதலர்தின வாழ்த்து அட்டைகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் வாழ்த்து அட்டைகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.
மற்ற ஊர்களில் தயாரிக்கும் வாழ்த்து அட்டைகளைவிட சிவகாசியில் தயாரிக்கப்படும் வாழ்த்து அட்டைகளுக்கு வட மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் வட மாநில வியாபாரிகள் அதிக அளவில் சிவகாசிக்கு வந்த வாழ்த்து அட்டைகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
சிவகாசியில் தயாரிக்கப்படும் வாழ்த்து அட்டைகளில் குழந்தைகள், இயற்கை காட்சிகள், பூ படங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் படங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வாழ்த்து அட்டைகள் இங்குள்ள அச்சகங்கள் தயாரித்து அனுப்பி வைக்கிறது

No comments:

Post a Comment