Thursday, September 19

விண்டோஸ் 8 சில சிறப்புகள்


புதிய முறையில் இயங்கி, எதிர்பாராத வசதிகளைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய, இதுவரை சந்திக்காத அல்லது பழக்கத்தில் உள்ளவற்றில், வேறுபாடான சிறப்புகள் என்ன?

குறிப்பிட்ட தொடுதிரை, சதுரக் கட்ட அமைப்பு, விண்டோஸ் ஸ்டோர் ஆகியன விடுத்து, மற்ற சில அம்சங்களை இங்கு காணலாம்.

1. உடன் இணைந்து வரும் ஆண்ட்டி வைரஸ்:
விண் 8 சிஸ்டத்துடன் புதிய முறையில் ஆண்ட்டி வைரஸ் மற்றும் பாதுகாப்பு புரோகிராம் ஒன்று இணைக்கப்பட்டு கிடைக்கிறது. Windows Defender என அழைக்கப்படும் இந்த புரோகிராம், நம் பெர்சனல் கம்ப்யூட்டரை வைரஸ், மால்வேர், ட்ரோஜன் புரோகிராம்கள் மற்றும் பிற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது. நாம் இதற்கென தனியாக ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று வாங்கி, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

2. பேட்டரி பேக் அப், ஸ்பீட் பூட் அப்:
விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மிக வேகமாக பூட் ஆகும்படி அமைக்கப்பட்டுள்ளன. மற்ற எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் இதனுடன் ஒப்பிட்டு இந்த வேகத்தினைத் தெரிந்து கொள்ளலாம். 

மேலும், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் போது, உடன் இயங்கும் ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் பட்டியலை, நாம் டாஸ்க் மேனேஜர் திறந்து சரி செய்திடலாம். அதே போல, கம்ப்யூட்டர் எடுத்துக் கொண்டு இயங்குவதற்குத் தேவையான மின் சக்தியைப் பல வழிகளில் செட் செய்து, தேவையற்ற நிலையில், மின்சக்தியைக் குறைக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனால், லேப்டாப் மற்றும் நோட்புக் கம்ப்யூட்டர்களில், டேப்ளட் பிசிக்களில், மின்சக்தி பயன்பாடு சிக்கனமாகிறது.

3.எளிதான விண்டோஸ் 8 அப்டேட்:
சிஸ்டத்தின் இயக்க பைல்கள் அப்டேட் செய்யப்படுகையில், தானாகவும், எளிதாகவும் கம்ப்யூட்டரில் அப்டேட் செய்திட வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எப்படி தானாக, சிஸ்டம் அப்டேட் பைல்களை மேம்படுத்திக் கொள்கிறதோ, அதே போல, மேம்படுத்திக் கொள்ளலாம். 

டேப்ளட் பிசிக்களை, வைபி இணைப்பு கிடைக்கும் இடங்களில் இயங்கி, இந்த அப்டேட் செயல்பாட்டினை மேற்கொள்ளும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட் மட்டுமின்றி, அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கான பைல்களும் அப்டேட் செய்யப்படுகின்றன. மேலும், புதிய வசதிகள் தரும் வகையில் பைல்கள் வெளியிடப்பட்டாலும், அவையும் சிஸ்டத்தில் தானாகப் பதியப் படுகின்றன.

4. விண்டோஸ் ஸ்டோர் அப்ளிகேஷன் புரோகிராம்கள்:
விண்டோஸ் 8 மெட்ரோ அப்ளிகேஷன் புரோகிராம்கள், மற்ற மொபைல் அப்ளிகேஷன் புரோகிராம்கள் போலவே இயங்குகின்றன. கம்ப்யூட்டர் ஒன்றில் இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள் போலவே இவற்றின் செயல்பாடுகள் உள்ளன. 

தொடக்கத்திலேயே, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டத்துடன், 11 அப்ளிகேஷன் புரோகிராம்களை மொத்தமாக ஒரு கூட்டு புரோகிராம் போலத் தந்துள்ளது. இவற்றின் மூலம் சமுதாய தளங்கள், மேப்கள், மெயில் அப்ளிகேஷன்,செய்தி தகவல்கள் வசதி மற்றும் பல வசதிகள் மொத்தமாகக் கிடைக்கின்றன.

இந்த வகையில் விண்டோஸ் 8 சிஸ்டம் ஒன்றுதான், கம்ப்யூட்டர்களிலும், மொபைல் சாதனங்களிலும் ஒரே மாதிரியாக இயங்கும் தன்மை கொண்ட சிஸ்டமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. 

5. பெர்சனல் கம்ப்யூட்டரில் மொபைல் கேம்ஸ்:

மொபைல் போன்கள் வந்த பின்னர், கேம்ஸ் விளையாடுவோர், கம்ப்யூட்டர்களை அவ்வளவாக நாடுவதில்லை. கையடக்க சாதனத்தில், அனைத்து வசதிகளோடும் விளையாடும் சுகத்தினை அனுபவித்து வருகின்றனர். அதனாலேயே, கேம்ஸ் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், மொபைல் போன்களில் இயங்கும் வகையிலேயே கேம்ஸ்களை வடிவமைத்துத் தந்து வருகின்றனர். 

ஆனால், விண்டோஸ் 8 மூலம், அந்த மொபைல் சாதனத்தில் இயங்கும் கேம்ஸ் அனைத்தும், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பிசிக்கள் அல்லது அல்ட்ரா புக் கம்ப்யூட்டர்களில் கிடைக்கின்றன. 

6. விண்டோஸ் 8 சார்ம்ஸ்:
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்குகையில் , நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் ட்யூன் அப் விஷயங்களை (search, share, start, devices, and PC settings) சார்ம்ஸ் பார் என்னும் பகுதியில் வைத்து இயக்கலாம். 

ஒரே ஒரு தொடல் மூலம் இவை உங்களுக்கு இயங்கி உங்கள் கட்டளைக்காகக் காத்து நிற்கும். நீங்கள் எந்த அப்ளிகேஷன் அல்லது புரோகிராமினை இயக்கிக் கொண்டிருந்தாலும், இந்த செட்டிங்ஸ் நுட்பங்கள் அனைத்தையும், ஒரே ஒரு தொடல் மூலம் இயக்கலாம். 

7. பைல் எக்ஸ்புளோரர்:
முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களில், இதனை விண்டோஸ் எக்ஸ்புளோரர் என அழைத்து வந்தோம். இதில் தற்போது ஒரு ரிப்பன் இணைக்கப்பட்டுள்ளது. பைல்கள் குறித்த தகவல் பக்கத்தில், பைல்களைப் பற்றிய கூடுதல் புள்ளி விபரங்கள் கிடைக்கின்றன. 

ஒரு பைலை மாற்றிக் கொண்டிருக்கையில், அதனைச் சற்று நேரத்திற்கு நிறுத்தி வைக்கலாம். பைலை காப்பி செய்கையில் வழக்கமாக ஏற்படும் எந்த பிரச்னைக்கும் தீர்வு தயாராகத் தரப்படுகிறது. இதுவரை நாம் பைல்களைக் கையாண்ட வழிகளுக்கும் மேலாகப் பல வசதிகள் இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளன. 

8. புதிய மீட்பு (recovery) வழிகள்:
விண்டோஸ் 8 சிஸ்டத்தில், புதிய மீட்பு வழிகள் தரப்பட்டுள்ளன. அவை Refresh மற்றும் Reset ஆகும். சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டு, சற்று முடக்கப்படுகையில், ‘Refresh’ அனைத்து விண்டோஸ் பைல்களையும், அவற்றின் முந்தைய நிலைக்கு மீட்டெடுக்கிறது. 

அதே நேரத்தில், கம்ப்யூட்டர் செட்டிங்ஸ், பைல்கள் மற்றும் அப்ளிகேஷன்களை அப்படியே இருந்த நிலையில் வைக்கிறது. ஆனால், ‘Reset’ கம்ப்யூட்டரை அதன் பேக்டரி நிலைக்குக் கொண்டு செல்கிறது. 

அதாவது புதியதாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப்பட்டால் எப்படி இருக்குமோ அந்த நிலைக்கு மாற்றி அமைக்கிறது. மீண்டும் விண்டோஸ் 8 சிஸ்டம் ரீஇன்ஸ்டால் என்ற முறையில் அமைக்க, உங்களுக்கு மீடியா சிஸ்டம் டிஸ்க் தேவையில்லை. 

விண்டோஸ் 8 சிஸ்டம் இன்னும் பல புதிய வசதிகளை, இயக்கத்தினைத் தருகிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் அனுபவத்தினை முற்றிலும் புதிய முறையில் மாற்றித் தர வேண்டும் என்ற நோக்குடன் மைக்ரோசாப்ட் இயங்கி, இந்த சிஸ்டம் மூலமாக வெற்றியும் பெற்றுள்ளது. இன்னும் பல வசதிகள், புதிய தகவல்கள் குறித்து வரும் வாரங்களில் பார்க்கலாம்.

Read more: http://therinjikko.blogspot.com/2012/11/8.html#ixzz2BXnupFgV

No comments:

Post a Comment