Farming

Farming Tips

ஜப்பானியக் காடை வளர்ப்பு:


ஜப்பானியக் காடை வளர்ப்பு: ஜப்பானியக் காடை வளர்ப்பு தமிழகத்தில் பிரபலமாகிவரும் முக்கிய தொழில்களில் ஒன்றாகும். காடைகள் பொதுவாக முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப் படுகின்றன. இருப்பினும் காடைகள் இறைச்சிக்காகவே அதிகம் வளர்க்கப்படுகின்றது. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்பு தொழிலானது பெரிய பண்ணைத் தொழிலாகவே வளர்ந்துள்ளது.

இறைச்சிக்காடை வளர்ப்பு: ஜப்பானியக் காடைகளை பொறுத்தவரையில் அவற்றை மிகக்குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம். கோழி வளர்ப்பினைப் போன்று அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானியக் காடைகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் நன்றாக வளரும். கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகிவிடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக்காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கொள்வதால் தீவனச்செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகிறது. இறைச்சிக்காக வளர்க்கும்பொழுது, காடைகளைத் தரையிலோ (ஆழ்கூளக் குப்பை முறை) அல்லது கூண்டு முறையிலோ வளர்க்கலாம்.
ஆழ்கூள முறை: இறைச்சிக்காக ஜப்பானியக் காடையை ஆழ்கூள முறையில் வளர்க்கும்பொழுது ஒரு சதுர அடிக்கு 6 காடைகள் வரை வளர்க்கலாம். காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்து பின்னர் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேம்பட்டு காடைகளை வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி, குறைந்த எடையுடன் அதிகத் தீனிச்செலவும் ஏற்படுத்தும். எனவே, காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு கூண்டுகளுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.
கூண்டுமுறை வளர்ப்பு: இறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும்பொழுது முதல் இரண்டு வாரம் வரை 3 அடி நீளம், இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் கூண்டு ஒன்றுக்கு 100 காடைக்குஞ்சுகள் வரை வளர்க்கலாம். அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம், இரண்டரை அடி அகலம், 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில் கூண்டு ஒன்றுக்கு 50 காடைகள் வரை வளர்க்கலாம்.
தீவனம் அளித்தல்: ஜப்பானியக் காடைகளுக்கும், கோழித் தீவனத்தில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தலாம். காடைகளுக்கு குஞ்சு பருவத்தில் அளிக்கும் தீவனம் 26 முதல் 28 சதவீதம் புரதமும், 270 கி.கலோரி எரிசக்தியும் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வகைத் தீவனத்தை முதல் 6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீனிகளை மாற்றிப் பயன்படுத்த திட்டமிடும்பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதவீத புரதமும், 2800 கி.கலோரி எரிசக்தியும் உள்ள தீனியை உபயோகிக்கலாம்.
ஜப்பானியக் காடை வளர்ச்சி: சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடையின் எடையில் சுமார் 65 முதல் 70 சதவீதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடையுள்ள காடையை சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கிறது. காடை இறைச்சியில் அதிக புரதமும் (20.5 சதவீதம்), குறைந்த அளவு கொழுப்பும் (5 சதவீதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது. (தகவல்: ரா.தங்கத்துரை, பிஎச்.டி., வெ.பழனிச்சாமி, பிஎச்.டி., வீ.தவசியப்பன், எம்.வி.எஸ்சி., வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி-630 206. 04577-264 288)

நன்றி: தினமலர்

மதிப்பூட்டிய பால் விற்பனை

நன்றி விவசாய மலர் 


பாலை எளிய முறையில் மதிப்புக்கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருக்கலாம். இதிலிருந்து பாதாம் பால் தயாரிக்கலாம். பாதாம் பாலில் பத்து வகையான நறுமண பால் தயாரிக்கலாம். 
1. பாதாம் பால், 
2. பிஸ்தா மில்க், 
3. ரோஸ் மில்க், 
4. ஸ்ட்ராபெரி மில்க்,
5. ஏலக்காய் மில்க், 
6. வென்னிலா மில்க்,
7. பைன் ஆப்பிள் மில்க்,
8. ஜிகர்தண்டா மில்க்,
9. சாக்லேட் மில்க்,
10. காபி மில்க் தயாரித்து கடையில் விற்பனை செய்வதன் மூலம் குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே அதிக லாபம் சம்பாதிக்கலாம்.
பாலை கெடாமல் வைத்திருக்க எந்தவிதமான ரசாயன கெமிக்கல் மற்றும் லிக்விட் பிரிசர்வேட்டிவ் கிளாஸ்-2, மற்ற கெமிக்கல் எதுவும் கலக்காமல் பாலை எளிய முறையில் மதிப்பு கூட்டும் முயற்சியால் பாலில் பாதாம்பால் தயாரித்து வீட்டிலிருந்தே கடைக்கு விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.
ஒரு பாட்டில் பாதாம்பால் தயாரிக்க பாட்டில், பால், சர்க்கரை, எசன்ஸ், மூடி, லேபிள் அனைத்து மூலப்பொருட்களும் சேர்த்து ஒரு பாட்டிலுக்கு ரூ.5 அடக்கவிலை ஆகும். நாம் கடைக்கு ஒரு பாட்டில் ரூ.10 விற்பனை செய்ய வேண்டும். பாட்டிலின் மேல் லேபிளில் எம்.ஆர்.பி. ரூ.15 அச்சிட்டு கடைக்கு விற்பனை செய்ய வேண்டும். கடைக் காரர் ஒரு பாட்டில் ரூ.13 விற்பனை செய்து ரூ.3 லாபம் அடைவார். தினமும் 100 பாதாம்பால் பாட்டில் விற்பனை செய்தால், மாதம் ரூ.1000 லாபம் சம்பாதிக்கலாம்.
இதே முறையில் பாக்கெட் பாலிலிருந்து மற்றும் பசுமாடு, எருமை மாடு வைத்திருப்பவர்களும் பாதாம்பால் தயாரிக்கலாம். 1 லிட்டர் பாலில் வெண்ணெய் எடுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி 50கிராம் வெண்ணெய் எடுக்கலாம். அதே பாலில் பாதாம்பால் தயாரித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். 5 லிட்டர் பாலில் கால் கிலோ வெண்ணெய் நமக்கு கிடைக்கும். வெண்ணெயின் மதிப்பு ரூ.60. வெண்ணெய் எடுத்த பாலில் பாதாம்பால் தயாரித்தால் பாலின் விலை ஒரு லிட்டர் ரூ.10 அடக்க விலை ஆகும்.
இந்த வகையான பாதாம்பால் எளிய முறையில் இயந்திரத்தின் உதவி இல்லாமல் கையால் சோடா மூடி போடும் சிறிய இயந்திரத்தை பயன்படுத்தி குறைந்த முதலீட்டில் தயாரிக்கலாம். சோடா மூடி இயந்திரத்தின் விலை ரூ.2000. வீட்டில் உள்ளவர்கள் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1000 பாட்டில் தயாரிக்கலாம்.
மற்றொரு முறை முழுவதும் இயந்திரத்தை பயன்படுத்தி பாதாம்பால் தயாரிக்கலாம். இதில் இரண்டு வகைகள் உள்ளது.
1. வெர்டிகல் டைப் - இதன் மூலம் ஒரு நாளைக்கு 2000 பாதாம்பால் பாட்டில் தயாரிக்கலாம். வேலை ஆட்கள் 6 பேர் தேவைப்படும். இதன் விலை 2 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 2. ஹரிஜான்டல் டைப் - இதன் இயந்திரத்தின் விலை 4 லட்சம். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பாதாம் பாட்டில் தயாரிக்கலாம். வேலையாட்கள் 10 பேர் தேவைப்படும். இதன் இரண்டுக்கும் இடம் 1000 சதுர அடி தேவைப்படும். தொடர்புக்கு: பி.சந்திரமோகன், 94892 56025.

அகர் மரம் வளர்ப்பு!!!

Agar Tree 


அகர் மரம்(Agar tree,Agarwood) என்பது புதிய வகை மரம் அல்ல,நமது நாட்டில் பல ஆண்டு காலமாக  சித்த ,ஆயுர்வேத மருந்துகள்  மற்றும் வாசனை பொருட்கள் தயாரிக்க   உபயோகிக்க பட்டு வந்த மரம் தான்.ஆனால்  தற்போது  இந்த மரம் அழிந்து வரும் மர வகைகளில் வரிசையில் உள்ளது..இந்த மரத்தில் இருந்து தான் உலகிலேயே மிக அதிக மதிப்புடைய அகர் ஆயில் எடுக்க படுகிறது,ஒரு கிலோ  ஆயில் இன் விலை அதிக பட்சம ஒரு லட்சம் வரைக்கும் விற்க படுகிறது.ஒரு கிலோ மர கட்டையின் விலை 30000 இல் இருந்து 60000 ஆயிரம் வரைக்கும் விற்க படுகிறது.

இதன் நன்மைகள்
-------------------------------
1 . மிகவும் வேகமாக  வளரகுடியது.
2 . சந்தன மரம் போல அல்லாமல்  7  அவது  வருடத்தில்  இருந்தே அறுவடை செய்யலாம்.
3 . ஓரளவு வறட்சியை தாங்ககுடியது. ( ஆனால் மிக வறண்ட நிலங்களுக்கு அகர் உகந்தது  அல்ல,வறண்ட நிலங்களுக்கு சந்தன மர சாகுபடி  உகந்தது,சந்தன மர வளர்ப்பு கட்டுரையை பார்க்கவும்)

4 . உலக அளவில் அகர் மரங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

7  வருடம்  நன்கு வளந்த ஒரு மரத்தில் முலம் 2 லட்சம் ருபாய் வரைக்கும் மிக எளிதாக பெறலாம்.3  மிட்டர் இடைவெளியில்  ஏக்கருக்கு  சுமார் 300  மர கன்றுகள்  நடலாம்.பொதுவாக அகர் இந்தியாவில் அஸ்ஸாமில்  அதிகமாக வளர்க்கபடுகிறது,தற்போது கர்நாடகாவில்  அதிக விவாசாயிகள் அகர்  வளர்ப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில்  சில தனியார் வேளாண்மை  பண்ணைகள் , அகர் நாற்றுகள் மற்றும் தேவையான உரங்களை வழங்கி ,அவர்களே நல்ல விலைக்கு  மரங்களை வெட்டி கொள்கிறார்கள்...

இது போன்ற தகவல்கள் நான் ஒரு விவசாய இதழிலும் சில விளம்பரங்களிலும் பார்த்தவை.உண்மையான தகவல் அறிய "அகர் வளர்ப்பில் உள்ள பிரச்சனைகள் " என்ற பதிப்பை படிக்கவும் . 

மேலும் விவரங்கள் பெற  தொடர்பு கொள்ளவும்: ஆனந்தபிரபு,ச  9886650235,anandhaprabhu@gmail.com
  

ஈமு கோழிப்பண்ணை அமைக்க விருப்பமா?

 

ஈமு கோழிகள் ரேட்டைட் இனத்தைச் சேர்ந்தவை. இப்பறவைகள் அவற்றின் விலைமதிப்புமிக்க இறைச்சி, முட்டைகள், தோல், தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் இறகுகள் போன்றவற்றுக்காக வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் எந்த தட்பவெப்ப நிலையையும் தாங்கி வளரக்கூடியவை. ஈமு மற்றும் ஆஸ்டிரிச் பறவைகள் ஒரே சமயத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஈமு வளர்ப்பே அதிகம் பிரபலமடைந்து வருகிறது.
ஈமு, ஆஸ்டிரிச், ரியா, கேசோவரி மற்றும் கிவி ஆகிய பறவைகள் ரேட்டைட் இனத்தைச் சார்ந்தவை. இவற்றுள் ஈமு மற்றும் ஆஸ்டிரிச் கோழிகள் உலகத்தின் பல பகுதிகளில் அவற்றின் இறைச்சி, தோல், தோலிலிருந்து பெறப்படும் எண்ணெய், இறகுகள் ஆகியவற்றுக்காக வணிக ரீதியாக வளர்க்கப் படுகின்றன. இப்பறவைகள் வெப்பமான நாடுகளிலும், குளிர் பிரதேசங்களிலும் வளரக்கூடியன. இப்பறவைகள் திறந்தவெளியிலும், தீவிர முறையிலும் வளர்க்கப் படுகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் ஈமு கோழி வளர்ப்பில் முதலிடம் வகிக்கின்றன.
ஈமு கோழிகளின் உடலமைப்பு: ஈமுக்கள் நீண்ட கழுத்து, சிறிய தலையையும், கால்களில் மூன்று விரல்களையும் கொண்டதாக இருக்கும். மூன்று மாத வயது வரை ஈமுக்களின் உடலில் இறகுகள், நீண்ட கோடுகள் போன்று காணப்படும். ஆனால் இந்த கோடுகள் 4-12 மாத வயதில் மறைந்து, பழுப்பு நிறமாக மாறிவிடும். வளர்ந்த ஈமு பறவைகள் 6 அடி உயரமும் 45-60 கிலோ உடல் எடை உடையனவாகவும் இருக்கும். கால்கள் மிக நீண்டவையாக இருக்கும். அவற்றின் காலின் தோல் மிக மொத்தமாகவும், செதில்களுடனும் காணப்படுவதால் மிக உறுதியாக இருக்கும். ஈமுக்களின் இயற்கையான உணவு பூச்சிகள், செடிகளின் இலைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளாகும். பெண் ஈமு பறவைகள் ஆண் பறவைகளைவிட பெரியதாக இருக்கும். ஈமுக்கள் முப்பது வருடம் வரை வாழக்கூடியவை. ஈமுக்களை மந்தையாகவோ அல்லது ஆண், பெண் பறவைகளாக ஜோடிகளாகவோ வளர்க்கலாம்.
ஈமுவிலிருந்து கிடைக்கும் பொருட்கள்: ஈமு கோழிக்கறி குறைந்த கொழுப்புச்சத்து கொண்டது. மேலும் மேல் தோல் மென்மையாகவும் உறுதியாகவும் இருக்கும். ஈமுக்களின் கால்தோல் சிறப்பான அமைப்பினைக் கொண்டிருப்பதால் அதிக விலைமதிப்பு கொண்டது. ஈமுக்களின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணவுக்காகவும் மருந்தாகவும், அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
ஈமு கோழிகளின் பண்ணைப் பொருளாதாரம்: ஈமு கோழிகளின் பண்ணைப் பொருளாதாரத்தினைப் பற்றி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் மூலதன செலவில் 68% கோழிகளை வாங்குவதற்கும், 13% பண்ணையை அமைப்பதற்கும், 19% குஞ்சு பொரிப்பகத்தினை அமைப்பதற்கும் செலவாகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு கருவுற்ற முட்டையினை உருவாக்குவதற்கு ரூ.793 எனவும் ஒரு நாள் குஞ்சு ஒன்று உற்பத்தி செய்வதற்கு ரூ.1232 செலவாகிறது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஒரு ஜோடி ஈமு கோழி வருடத்திற்கு ஆகும் தீவனச்செலவு ரூ.3578. ஒரு நாள் வயதடைந்த ஈமு கோழிக்குஞ்சு ஒன்றின் விற்பனை விலை ரூ.2500 - 3000. எனவே, ஈமு கோழிப் பண்ணையினை லாபகரமாக நடத்த முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும் தீவனச்செலவு குறைவாகவும் குஞ்சு பருவத்தில் இறப்ப சதவீதம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.
தொடர்புக்கு: ஆர்.ஜி.ரீஹானா, 268/77, ஓல்ட் ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர், தாராபுரம்-638 657.
-ஆர்.ஜி.ரீஹானா, எம்.எஸ்சி., எம்.பில்., அக்ரி கிளினிக், 89037 57427.

நன்றி தினமலர்  

காளான் உற்பத்தி!!

நன்றி  விவசாயமலர்   ஆகஸ்ட் 2010

காளான் உற்பத்தி செய்வது என்பது ஒரு கடினமான வேலையில்லை. காளான் உற்பத்தி செய்ய ஓரளவுக்கு படித்திருந்தாலே போதும். வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம். ஆனால் கோடை காலத்தில் 30 -40% மகசூல் குறைவாக கிடைக்கும்.
சிப்பிக்காளான் கடல் சிப்பியின் தோற்றமுடையதாய் இருப்பதால்தான் இவற்றுக்கு இந்த பெயர் வந்தது. பொதுவாக சிப்பிக் காளானில் வைட்டமின் பீ அதிகமாக இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. வைட்டமின் பீ-ல் உள்ள போலிக் ஆசிட் அதில் இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு நல்லது. நார்ச்சத்து உள்ளதால் நாம் உண்ணும் உணவுகள் நன்றாக செரிமானம் அடைய நிவாரணியாக செயல்படுகிறது. வயிற்றுப்புண்களை குணப்படுத்துகிறது. வயோதிகப்பருவத்தில் ஏற்படும் கால் மூட்டுவலிகளை மிக அற்புதமாக சிப்பிக்காளான் குணப்படுத்துகிறது. சிறந்த கண்பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர, இரும்பு சத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் காளானில் உள்ளன. ஒரு மனித உடலுக்கு எவை எவை எநத எந்த அளவுக்கு தேவைப்படுமோ அந்த அளவிற்கு சத்துப் பொருட்கள் சிப்பிக்காளானில் உள்ளது. எனவே சிப்பிக்காளான் ஒரு முழுமையான உணவாகும். சிறியவர் முதல் பெரியவர் வரை சிப்பிக்காளானை வாரம் இருமுறை உணவில் சேர்த்து உண்ணலாம். சிப்பிக்காளானை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பதால் வயோதிகப்பருவத்தை தள்ளிப்போடுகிறது. இளமையை அள்ளித்தருகிறது.
வைக்கோல் தயாரிப்பு: காளான் வளர்ப்பதற்கு நெல் வைக்கோலைக் கொண்டு உருளை படுக்கைகள் தயாரிக்க வேண்டும். புதிய நெல் வைக்கோலை 5 செ.மீ. நீளத்திற்கு வெட்டி, 4-5 மணி வரை நீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு வைக்கோலை நன்கு கொதிக்கும் நீரில் ஒரு மணிநேரம் வேகவிட வேண்டும். பின் வைக்கோலை அகற்றி உலர்த்திக் கொள்ள வேண்டும்.
காளான் படுக்கை தயாரித்தல்: 2க்கு 1 அடி அளவுக்கு 80 காஜ் கனமுள்ள பாலிதீன் பைகளில் அடுக்கு முறையில் காளான் விதையிடப்பட்ட படுக்கைகள் தயாரிக்கப் படுகிறது. பாலிதீன் பையின் அடிப்பகுதியை சணலால் கட்டி அதை உள்பக்கமாக திருப்பிவிட வேண்டும். பையின் அடிப்பகுதியில் 5 செ.மீ. உயரத்திற்கு வைக்கோல் துண்டுகளை பரப்பி அதன் மேல் 30 கிராம் காளான் வித்தை தூவ வேண்டும். இதே போல் 4 அடுக்குகள் தயாரித்து மேல்பகுதியில் 5 எச்.மீ. வைக்கோல் பரப்பி, பையின் வாய்பகுதியை சணலால் இறுக்க கட்டவேண்டும். பாலிதீன் மையப்பகுதியில் பென்சில் அளவுள்ள 5-10 துளைகள் போடவேண்டும்.
காளான் வித்து பரவும் முறை: மேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட உருளைப் படுக்கைகளை வயரில் கட்டி தொங்கவிட வேண்டும். படுக்கையில் பூசண விதைகள் பரவுவதற்கு 15 நாட்கள்ஆகும். பின் படுக்கைகளைக் காளான் தோன்றும் அறைக்கு மாற்ற வேண்டும்.
காளான் அறை: காளான் பூசணம் முழுமையாக பரவி ஒரு வாரத்திற்குள் பையைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும். காளான் மொட்டு தோன்றிய மூன்று நாட்களில் பெரியதாகிவிடும். அவற்றை அறுவடை செய்த பின் பாலிதீன் பையை நீக்கிவிட வேண்டும். அறையின் வெப்பநிலை, ஈரப்பதத்தை தேவையான அளவு பராமரிக்க மணலில் தண்ணீர் தெளிக்கவும்.
காளான் அறுவடை: காளான்களை அறுவடை செய்தபின் படுக்கைகள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு வார இடைவெளியில் மீண்டும் காளான் அறுவடைக்கு வரும். இதுபோல் 3 முறை அறுவடை செய்யலாம். ஒரு படுக்கை தயார் செய்ய 500 கிராம் வைக்கோல் பயன்படுத்தினால் 900  கிராம் மகசூல் கிடைக்கும். மேற்கூறிய முறையில் காளான் வளர்ப்பு செய்து அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.

தொடர்புக்கு:
பாண்டியன்,
அகல்யா பார்ம்ஸ், 92832 52096.

 -கே.சத்தியபிரபா, 96591 08780.

உயர்தர நாட்டு பசுக்கள்


நன்றி :விவசாயமலர் செப்டம்பர் 22,2010


தார்பார்க்கர் பசு: இப்பசுவின் பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனம் ஆகும். பாகிஸ்தானை ஒட்டிய எல்லையோர கிராமங்களில் இவை பரவலாக காணப்படும். வெள்ளை மற்றும் கருப்பு கலந்த வண்ணத்தில் இவை இருக்கும். இப்பசுக்களின் எடை சுமார் 295-325 கிலோ இருக்கும். நாளொன்றுக்கு 10-15 லிட்டர் பால் கறக்கும். இதன் கொம்புகள் சிறியதாக பின்நோக்கியும் மேல் நோக்கியும் இருக்கும். காதுகள் பெரியதாக முன்னோக்கி தொங்கிக் கொண்டிருக்கும்.
இதர குறிப்புகள்: முதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள்-1250. ஈத்து இடைவெளி - 435 நாட்கள். நன்மை செய்யக்கூடிய கொழுப்பு சத்து - 4.9%.



கிர் பசு: இதன் பூர்வீகம் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகள் ஆகும். இதன் தோல் செவ்வலை நிறத்தில் மிருதுவாக இருக்கும். சில வகை கிர் பசுக்களுக்கு வெள்ளை புள்ளிகள் இருக்கும். சாந்த குணம் கொண்டது. சிறியவர் கூட பால் கறக்கலாம். இதன் தலை பெரியதாகவும், நெற்றி விரிவடைந்ததாகவும், கண்கள் அரை தூக்கத்தில் இருப்பது போல் தோற்றம் அளிக்கும். காதுகள் நீண்டு சுருண்டு இருக்கும்.
இதர குறிப்புகள்: எடை : 310-335 கிலோ. முதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள் - 1550. ஈத்து இடைவெளி - 520 நாட்கள். நாளொன்றுக்கு பால் கறக்கும் திறன் : 10-18 லிட்டர், நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து-4.4%
காங்ரெஜ் பசு: இதுவும் குஜராத் மாநிலத்தை தாயகமாக கொண்டது. மிகவும் வலிமை வாய்ந்தது. உழவுத் தொழிலுக்கும் இப்பசுக்களை பயன்படுத்தலாம். வெள்ளை மற்றும் கறுப்பு கலந்த வெள்ளை நிறத்தில் இப்பசுக்கள் இருக்கும். நெற்றி அகன்று இருக்கும். கொம்புகள் பெரியதாக அகன்று விரிந்து இருக்கும். மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும்.
இதர குறிப்புகள்: இதன் எடை: 360-385 கிலோ. முதல் ஈத்துக்கு தயாராகும் நாட்கள் - 1440. ஈத்து இடைவெளி: 490 நாட்கள். நாள் ஒன்றுக்கு பால் கறக்கும் திறன்: 10-15 லிட்டர். நன்மை செய்யக்கூடிய கொழுப்புச்சத்து: 4.8%.
இப்பசுக்களின் சிறப்பம்சங்கள்: வெயில் மற்றும் மழை போன்ற எந்த சீதோஷ்ணத்திற்கும் கட்டுப்பட்டு வாழும். இப்பசுக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். தேவையற்ற ரசாயன ஊசிகள் இதற்கு தேவையில்லை. மருத்துவ செலவுகள் வைக்காது. நோய் எதிர்ப்புசக்தி அதிகம் கொண்ட இப்பசுக்களின் பால் மற்றும் நெய் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை செய்யக்கூடியவை. இதன் சாணம் மற்றும் கோமியம் அதிக சக்தி வாய்ந்த தொழு உரம் உற்பத்தி செய்ய உதவுகிறது. இயற்கை விவசாயத்திற்கு இது பெருமளவில் உதவிபுரியும். வறட்சிக் காலங்களிலும் இப்பசுக்கள் பால் கொடுக்கும் வல்லமை பெற்றது. இவைகளுக்கு தேவையான விந்தூசி இப்பொழுது தமிழகத்தில் பரவலாக கிடைக்கிறது.
எஸ்.ராஜேந்திரன், 92620 41231.

ஆடு வளர்த்தவரின் அனுபவம்

நன்றி:  தினமலர்



என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப்பாளையம் கிராமத்தில் கரூர்வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெயரில் கடந்த இரண்டு வருடங்களாக அறிவியல் ரீதியாக வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வளர்த்து வருகின்றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து பண்ணையை தொடங்குவதற்கு முன்பே பல வகையான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறிவியல் ரீதியாக பராமரித்தால் ""ஆடு வளர்ப்பு'' ஒரு லாபகரமான தொழில் என்பது நான் அனுபவத்தில் உணர்ந்த உண்மை.
பசுந்தீவன உற்பத்தி: கோட்டைப்பாளையம் கிராமத்தில் மூன்று ஏக்கர் விவசாய பூமியை குத்தகைக்கு எடுத்து கோ 4 கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், கோ.எப்.எஸ்.29 தீவனச் சோளப்பயிர், வேலி மசால், குதிரைமசால் மற்றும் அகத்தி போன்ற பசுந்தீவனங்களைப் பயிரிட்டேன். ஆடுகளுக்கு தேவைப்படும் பசுந்தீவன அளவை கணக்குப்போட்டு, சிறிய சிறிய பாத்திகளை அமைத்து பசுந்தீவனங்களை முறையாகப் பயிரிட்டு வளர்ப்பதால் ஆண்டு முழுவதும் பசுந்தீவனப் பற்றாக்குறை ஏற்படுவது இல்லை.
விற்பனை வழிமுறைகள்: நான் வியாபாரிகளுக்கு ஆடுகளை அறுப்பதற்கு விற்பனை செய்வதற்கு முன்பே எனது ஆடுகளை எடைபோட்டு, அதிலிருந்து வெட்டிய உடல் எடை எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப்போட்டு என்னுடைய ஆட்டின் மதிப்பை தெரிந்துகொண்டு விலை நிர்ணயம் செய்துகொள்வேன். பிறகு வியாபாரியிடம் விற்பனை செய்யும்போது நான் நிர்ணயித்த விலைக்குக் குறைவாக ஆடுகளைக் கொடுக்க மாட்டேன். இவ்வாறு ஆடுகளை விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைக்கிறது. மேலும் உயிருடன் ஆடுகளை விற்பதைவிட அவற்றை இறைச்சியாக மதிப்பூட்டி விற்பனை செய்யும்போது மேலும் அதிக லாபம் கிடைக்கும் என்பதை உணர்ந்து ஆடுகளை அறுக்க ஒரு இடத்தை ஏற்படுத்தி, போதிய வசதிகளைச் செய்து, தேவைப்படும்போது, ஆடுகளை அறுத்து இறைச்சியாகவும் விற்பனை செய்கிறேன்.
மேலும் ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க ஆர்வமுள்ள பண்ணையாளர்கள் கீழ்க்காணும் சில முக்கிய விபரங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
* ஆட்டுப்பண்ணை தொடங்கும் பண்ணையாளரே அந்தப் பண்ணையின் முதல் வேலையாளாக இருக்க வேண்டும்.
* ஆட்டுப்பண்ணை தொடங்க முதலில் முறையான பயிற்சி அவசியம்.
* பசுந்தீவன உற்பத்தியில் முக்கிய கவனம் செலுத்தி அதிக அளவு பயறுவகை மற்றும் மரவகைப் பசுந்தீவனங்களைப் பயிரிட வேண்டும்.
* உயர்ந்த இனக்கிடாய்களையும், பண்ணை முறையில் வளர்க்கப்பட்ட ஆடுகளையும் தேர்வு செய்து, வாங்கி, பண்ணையை தொடங்க வேண்டும்.
* நோய் தடுப்பு, குடற்புழு மற்றும் ஒட்டுண்ணிகள் நீக்கம் போன்ற பண்ணை நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* குட்டிகளில் இறப்பைத் தடுக்க, குட்டிகள் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* நாம் வளர்த்த ஆட்டின் மதிப்பைத் தெரிந்துகொண்டு இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் ஏமாறாமல் உடல் எடைக்கு ஏற்ப ஆடுகளை விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.
மேற்காணும் வழிமுறைகளை கடைபிடித்து அறிவியல் ரீதியாக ஆடுகளை வளர்த்தால் வெற்றி நிச்சயம்.  
தொடர்புக்கு: 
ஐ.நாசர், 
கோயம்புத்தூர். 99943 82106.
-கே.சத்தியபிரபா, உடுமலை

நலம் தரும் நாட்டு கோழி பண்ணை!!!


நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம், நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இதனால் இதன் இறைச்சியும் விலை அதிகமாக இருக்கிறது.நாட்டுக் கோழி ஏன் டிமாண்ட் ஆக இருக்கிறது? நாட்டுக் கோழிகளை யாரும் "பிராய்லர்" கோழிகள் போல் லட்சக்கணக்கில் பண்ணை முறையில் வளர்ப்பதில்லை. கிராமங்களில் பெண்கள் இவற்றை புழக்கடையில் தான் வளர்க்கிறார்கள். அதனால் இந்த கோழிகள் பெருமளவில் கிடைப்பதில்லை. ஆனால் பிராய்லர் கோழிகளை இன்குபேட்டர் முறையில் பொரிக்க வைத்து எடுப்பதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை பெற முடிகிறது. அவற்றை வளர்த்து கறிக்கோழிகளாக மாற்ற முடிகிறது.இந்த பிராய்லர் கோழிகள் செயற்கையாகவே பிறந்து ஊக்கமருந்துகளால் உப்பிய பலூன் போல பெருத்து 47 நாட்களில் 2 கிலோவை தாண்டி விடுகிறது. இந்த கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்திக்காக செலுத்தப்படும் மருந்துகள் மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி இன்னும் சரியான விளக்கம் இல்லை.

ஆக..இந்த நிலையில் நாட்டுக்கோழிகளை அதிக அளவில் உற்பத்தில் செய்தால் ஏராளமாக நாட்டுக் கோழிகள் விற்பனை ஆகும். நாட்டுக் கோழி பண்ணை வைப்பவருக்கு இதனால் லாபம் கொட்டும்.மேலும் நாட்டு கோழி பண்ணை அமைக்க பிராய்லர் கோழிகளை போல மிக அதிக செலவிலான செட் போட தேவையில்லை,சாதாரண  மிக சிறிய  அளவிலான  ஓட்டைகள் கொண்ட கம்பி வலை 'பெண்சிங்' போதுமானது.இதனை கணக்கில் கொண்டு "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்' கிராமப்புற பெண்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் நாட்டுக் கோழி வளர்ப்பது பற்றிய 3 மாத கால தொலை தூர படிப்பை வழங்க உள்ளது. தபால் வழியில் கற்பிக்கப்படவுள்ள இந்த பாடத்திட்டத்தில் கோழியினங்கள், தீவனங்கள்,நோய் கண்டறியும் முறை, பண்ணை அமைத்தல் உள்பட எளிதாக நாட்டுக் கோழிகளை வளர்ப்பது பற்றி சொல்லித் தர போகிறார்கள்.

இந்த பாடத்தை படித்து விட்டால், கிராமப்புறத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் சிறிய அளவில் பண்ணையை தொடங்கி நடத்தலாம். பிறகு வெற்றிகரமாக பெரிய பண்ணைகளை தொடங்கலாம். இந்த நாட்டுக் கோழி வளர்ப்பு தபால் வழி படிப்பில் சேர 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க ெத்ரிந்திருக்க வேண்டும். இவ்வளவு தான் தகுதி.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேசிய வங்கி ஒன்றில் 220 ரூபாய்க்கு கல்வி இயக்குநர், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம், மாதவரம், சென்னை. என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து கூடவே ஒரு கடிதத்தில் தங்கள் பெயர்,முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எழுதி இதே முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அவர்கள் பாடத்திட்டங்களை அனுப்புவார்கள். படித்து பாஸாகலாம்.
இது பற்றி மேலும் விவரங்கள் அறிய 044-2555 4375, 2555 1586, 2555 1587 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Copied From : http://tasteofkarthick.blogspot.com

சந்தனமரம் வளர்ப்போம் ,கோடிஸ்வரன் ஆவோம்!!!

Copied From : Dinamalar.com

சந்தன மரங்களை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமாக வளர்க்க அரசின் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்திட மாவட்ட வனத்துறையிடமே அனுமதி பெறவேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்துறையினர் நடத்தும் ஏலத்தின் மூலம் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற்பனை செய்யலாம். 20% தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். எனவே விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்க முன்வந்துள்ளனர். சந்தன மரங்கள் வேலிகளிலும் தரிசு நிலங்களிலும் தானாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய தெய்வீக மரமாகும். இந்தியாவின் அனைத்து நிலப் பகுதிகளிலும் தட்ப வெப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறைப்பகுதிகளிலும் வளரக்கூடியது. சந்தன மரங்களை வீடுகளிலும் பூங்காக்களிலும் விவசாய நிலங்களிலும் பள்ளி, கல்லூரி தொழிற்சாலை வளாகங்களிலும் வளர்ப்பதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பின் பல கோடி ரூபாய் அன்னியச் செலாவணியை ஈட்டமுடியும். விவசாயமாகச் செய்வதெனில் 3 மீட்டர் இடைவெளியில் சிறு குழிகள் அமைத்து ஏக்கருக்கு 450 மரங்களை வளர்க்க முடியும். சந்தன மரங்கள் மற்ற மரங்களுடன் இணைந்து வளரும் தன்மை கொண்டது. எனவே தென்னை, நெல்லி, சப்போட்டா, சவுக்கு, முருங்கை, முந்திரி, குமிழ் மலைவேம்பு, மகோகனி மற்றும் பல வகையான வன மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக வளர்க்கலாம். விதைகளை நேரடியாக குழிகளில் ஊன்றி குறைந்த செலவில் வளர்க்கலாம். கன்றுகளும் நடவு செய்யலாம்.  ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 6000 ரூபாய் வரை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 12 ஆண்டுகள் வளர்ந்த மரத்திலிருந்து மூன்று முதல் ஐந்து கிலோ கட்டை (வாசனை மிகுந்த வைரப்பகுதி) கிடைக்கும். 20 ஆண்டுகள் வளர்ந்த மரத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறலாம். எனவே இனி சந்திலும் பொந்திலும் சந்தனம் வளர்ப்போம். முடிந்தால் சந்திர மண்டலத்திலும் வளர்ப்போம். இயற்கை வளம் பெருக்குவோம். தரிசு நிலங்களையும் தங்கம் விளையும் பூமி ஃயாக்குவோம். கலாமின் கனவை நனவாக்குவோம். சந்தனம், குமிழ், மலைவேம்பு, மகோகனி, ஈட்டி, சில்வர் ஓக் மற்றும் அனைத்து வகை வன மர விதைகள், கன்றுகள் வளர்ப்பு குறித்த ஆலோசனைகள் ஆய்வக முகவரியில் தொடர்பு கொண்டு பெறலாம். 98429 30674.

தினமலரில்  ஏ.சந்தனமோகன், சந்தன வளர்ச்சி ஆய்வு பண்ணை கந்தன்பாளையம், காமநாயக்கன்பாளையம், பல்லடம், கோயம்புத்தூர்-641 658.

குறைந்த தீவனம் ,அதிக பால் சாஹிவால் ரக மாடுகள்

Copied From  தமிழ்நாடு வேளாண்மை இணையதளம் , கோயம்புத்தூர்



காட்டு வாழ்க்கையிலிருந்து, நாகரிகப் பாதையில் நடைபோடத் தொடங்கிய மனிதன், பாலுக்காக மட்டுமில்லாமல்.. உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து என பல வகையிலும் உதவும் என்பதற்காக தன்னுடன் சேர்த்துக் கொண்ட விலங்குகளில் ஒன்றுதான் மாடு!
கன்னியாகுமரி தொடங்கி, காஷ்மீர் வரை பல்வேறு  பெயர்களில் வகைவகையான இன மாடுகள் இங்கே இருக்கின்றன. ஆனால், காலப்போக்கில் ... ‘அதிக பால’ என்கிற கோஷம் இந்தியாவில் உரத்து ஒலித்ததோடு, மாடுகளின் பிற தேவைகளும் குறைய ஆரம்பித்து விட்டது. இதனால், நம் நாட்டு ரக மாடுகள் எல்லாம் ‘அடிமாடு’ என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டு, வெளிநாட்டுக் கலப்பின மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.
அதே சமயம், ‘நம் நாட்டு மாடுகளிலும் அதிக பால் கொடுக்கும் மாடுகள் இருக்கின்றன’ என்கிற உண்மையை உணர்த்த தமிழக விவசாயிகளில் சிலர், வடமாநிலங்களிலிருந்து அத்தகைய மாடுகளை வாங்கி வந்து வளர்த்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம், கோனூர் கிராமத்தைச் சேர்ந்த திம்மையா, அவர்களில் ஒருவர். நாட்டு மாடுகளைப் பற்றி கேட்டால், மடை திறந்த வெள்ளமாக வந்து விழுகின்றன அவரிடமிருந்து வார்த்தைகள்..

ஒரு டோஸ் விந்து 1,500 ரூபாய்!
“விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்குற குடும்பம் எங்களோடது. அப்பா திடீர்னு இறந்ததும் விவசாயத்தை நான் கையில் எடுக்க வேண்டியதாயிடுச்சு. விவசாயத்துக்காக அப்பா கடன் வாங்கியருந்தார். கொஞ்ச நிலத்தை வித்து, அதையெல்லாம் அடைத்தேன். ‘வருடம் முழுக்க ஓய்வில்லாமல்  உழைத்தாலும், விவசாயத்தில் கடன் மட்டுமே மிச்சமாகிறது ஏன்.. என்ன காரணம்?’னு அடிக்கடி யோசிச்சிக்கிட்டே இருப்பேன். அப்பத்தான் இயற்கை விவசாயத்தைப் பற்றி  தெரிய வந்தது. இப்ப, 10 வருடமா இயற்கை விவசாயம்தான். சுபாஷ் பாலேக்கரோட ‘ஜீரோ பட்ஜெட் பயிற்சி’யில கலந்துகிட்ட பிறகு, நாட்டு மாடுங்க மேல் தனி மரியாதை வந்துடுச்சு. உடனே, உம்பளாச்சேரி ரக மாடுங்க இரண்டை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். பயிருங்களுக்கத் தேவையான ஜீவாமிர்தத்துக்கு சாணம், மாட்டுச் சிறுநீர் இதுக்கெல்லாம் பிரச்சனை இல்லாம போயிடுச்சு.

இதெல்லாம் சரி.. கலப்பின மாடுங்க மாதிரி அதிகமா பால் கிடைக்க மாட்டேங்குதேனு ஒரு யோசனையோட, நாட்டு மாடுகள் பத்தின தகவல்களைத் திரட்டத் தொடங்கினேன். வெளிநாட்டு மாடுகளுக்கு சமமா பால் கொடுக்கிற நாட்டு ரக மாடுகள் வட இந்தியாவில் இருக்கிறது தெரிந்து, அதை வாங்குகிற முயற்சியில் இறங்கினேன். இதற்க்கு நடுவில், ‘கிர்’ மாட்டோட விந்தை, உம்பளச்சேரி  பசுவுக்கு செயற்கை கருவூட்டல் செய்யலாமே’னு ஒரு யோசனை தோணுச்சு. அதுக்காக சேலத்தில் இருக்கிற ஒருத்தர்கிட்ட கேட்டேன். ஒரு டோஸ்.. 1,500 ரூபாய்னு சொன்னார். நாட்டு மாட்டு விந்துவுக்கு உள்ள கிராக்கியைப் பார்த்த பிறகு, செயற்கை முறை கருவூட்டறது தொடர்பான  பயிற்சி எடுத்துக்கிட்டு, அந்த வேலையையும் செய்ய ஆரம்பித்தேன்.

ஒரு மாடு .. 60 ஆயிரம் ரூபாய்!
மாடு வாங்கறதுக்காக குஜராத், பஞ்சாப், ஹரியானா பகுதிகளுக்கு நேரில் சென்றேன். அதில் என்னை அதிகமாக கவர்ந்தது.. சாஹிவால் ரக மாடுங்கதான். சாதாரணமா மேய்ச்சலுக்கு போயிட்:டு வந்து, 15 லிட்டர் தொடங்கி, அதிகபட்சம் 20 லிட்டர் வரை பால் கறக்குறது நேரில் பார்த்ததும், ஆச்சரியமா போயிடுச்சு. மேய்ச்சலைத் தவிர வேறெந்த தீவனத்தையும் கொடுக்காமலே இவ்வளவு பால் கறக்குதே.. இதை வாங்கிட்டு போயே தீரணும்னு முடிவெடுத்தேன்.
எங்ககூட வந்திருந்தவங்களோட சேர்ந்து 10 மாடுகளை  வாங்கினேன். ஆனா, அதுங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கிறது சாமானியப்பட்ட வேலையா இல்லை. நம்ம  ஊரில் லாரிகளில் மாடுகளை ஏத்திக்கிட்டு போனா.. யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டாங்க. வட மாநிலங்களில் அங்கங்க கராம மக்களே வண்டியை மறிச்சுடறாங்க. ‘அடிமாட்டுக்கு கொண்டு போகலை. வளர்க்கறதுக்குத்தான் கொண்டு போறோம்’னு ஆதாரத்தோட புரிய வைத்துவிட்டு வர்றதுக்குள்ள தாவு தீர்ந்து விடும். அது போக அனுமதி, போக்குவரத்துனு செலவும் அதிகமா பிடிக்கும். அதாவத, ஒரு மாட்டோட விலை தமிழ்நாட்டுக்கு வரும் போது 60 ஆயிரம் ரூபாய் ஆயிடுச்சு.

குறைந்த பராமரிப்பு!
பெரும்பாலும் பாலுக்காக மட்டும்தான் இப்பெல்லாம் மாடுகள் வளர்க்கறாங்க. அதனால் தான், வெளிநாட்டு மாடுகளை வளர்க்கிறதில் விவசாயிகள்  அதிக ஆர்வம் காட்டுறாங்க. ஆனால், அந்த மாடுகளுக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை,சாஹிவால் மாதிரியான நம்ம நாட்டு மாடுகள்.  கிடைத்ததைத் தின்னுட்டு, நாளொன்றுக்கு அதிகபட்சம்  20 லிட்டர் வரைக்கும் பால் கொடுக்கிறது சாஹிவால் ரக மாடுகள். வெளிநாட்டு மாடுகளை வெயில், மழைக்கு பாதுகாத்து வளர்த்தாலும், பால் மூலமா வர்ற வருமானத்தில் சரிபாதி தீவனத்துக்கே செலவாகிறது. ஆனால், இந்த மாடுகளை  வளர்த்தால்.. தீவனச் செலவை பற்றி அதிகமாக அலடிக்க தேவையில்லை. குறைந்த செலவு, குறைந்த பராமரிப்புலேயே அதிக பால் கொடுக்கும்.

வருடத்தில் 6,000 கிலோ பால்!
இந்தியாவில் பாலுக்கான சிறந்த பசு இனம்னா.. அது இந்த சாஹிவால் ரக மாடுங்கதான்.  ஒரு ஈத்தில் (305 நாட்கள்) 3,000 கிலோ முதல் 6,000 கிலோ வரைக்கும் பால் கொடுக்கற அற்புதமான இனம். இதோட பாலில் 4 முதல் 4.5 சதவிகிதம் கொழுப்புச் சத்து இருக்கிறது. பெரிய மடி, நல்ல சிவப்பு நிறம், கனமான குட்டைக் கொம்பு, சிறிய திமில், கம்பீரமான  உடமைப்பு என்று பார்க்கிறதுக்கே அம்சமா இருக்கும். கடுமையான வெப்பம், கடுமையானப் பனி, மழைனு எதற்கும்  சளைக்காது. வெளிநாட்டு மாடுகள், குளிர்காலத்தில் அதிகமாகவும், வெயில் காலத்தில் குறைந்தளவும் பால் கொடுக்கும். ஆனால், சாஹிவால் உள்ளிட்ட நாட்டு மாடுகள், எப்பவும் ஏற்றத் தாழ்வு இல்லாம ஒரே அளவில் பால் கொடுக்கும்.

பஞ்சாப் மாநிலத்தில்தான் இந்த மாடுகளை அதிகமாக வளர்க்கிறார்கள். நம்ம ஊரில் செம்மறி ஆடுகளை மந்தையாக மேய்க்கிறது மாதிரியே, இந்த மாடுகளை மந்தை, மந்தையா மேய்க்கிறாங்க.  அதனால் இ்ந்த மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடறதே இல்லை. ரொம்ப தூரம் வரைக்கும் மேய்ச்சலுக்கெல்லாம் போயிட்டு வருது. கை வளர்ப்பா வளர்த்தா சொன்னதெல்லாம் கேட்கிற அற்புதமான மாடு சாஹிவால், நம்ம ஊரில் மாடுகளை முன்னவிட்டு, பின்னாடி போறோம். வட நாட்டில் மேய்க்கறவரு முன்னாடி போக, அவருக்கு பின்னாடியே போகிறது மாடுகள். அதுக்கு காரணம் மாடுகளை வளர்க்கிற முறைகள் தான்.

அன்புக்கு அடிமை!
சாஹிவால் மாடுகள் ரொம்பவும் உணர்வுப் பூர்வமானது. அதை அடித்து அடக்கணும்னு நாம் நினைத்தால் கண்டிப்பா அடங்காது. முரண்டு பிடிச்சுக்கிட்டே இருக்கும். அதே நேரத்தில் தடவிக் கொடுத்து அன்பா வளர்த்தா, நாய்க் குட்டி மாதிரி காலை சுத்திக்கிட்டே இருக்கும். பொதுவா எந்த மாடாக  இருந்தாலும், ஒரே இடத்தில் கட்டிப் போட்டு வளர்க்க கூடாது. தினமும் 3 மணி நேரமாவது சூரிய ஒளி மாடுகளின் உடலில் படுகிற மாதிரி நடக்க விடணும்.
சாஹிவால் மாடுகள் 18-ம் மாசத்தில் பருவத்திற்கு வந்துவிடும். நான் வாங்கிட்டு வந்த மாடுகளை மேய்ச்சல் முறையில் வளர்க்கிறேன். ஒரு பசுவுக்கு சராசரி 13 லிட்டர் பால் கிடைக்கிறது. இந்த ரக மாடுகள் கூட்டமாக இருக்கிறததான் விரும்பும். அதனால் குறைந்தது 5 மாடுகளையாவது ஒன்றாக சேர்த்துதான் வளர்க்கணும். நம்ம ஊரில் இந்த மாடுகளை இப்பதான் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுகளோட எண்ணிக்கை அதிகரிக்கிறப் பொழுது இங்கேயே விலை குறைவாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது” என்று விரிவாகப் பேசி முடித்தார் திம்மையா..

பாலுக்கான  நாட்டு ரக மாடுகள்
ரகங்கள்
கிடைக்கும் இடங்கள்
கிர்
குஜராத். ராஜஸ்தான்
சாஹிவால்
பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம்
ரெட் சிந்தி
ஆந்திரா
வறட்சியைத் தாங்கும் இனங்கள்
மால்வி
ராஜஸ்தான், மத்திய பிரதேசம்
நாகேரி
டெல்லி, ஹரியானா, உத்திரப்பிரதேசம்
ஹாலிக்கார்
கர்நாடகா
காங்கேயம்
தமிழ்நாடு
பொதுவான ரகங்கள்
ஹரியானா
ஹரியானா, பீகார், பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா
ஓங்கோல்
ஆந்திரா
காங்கிரேஜ்
குஜராத்
தார்பார்க்கர்
குஜராத், ஆந்திரா
தொடர்புக்கு :
திம்மையா, அலைபேசி : 94861 -11653   

No comments:

Post a Comment