குறைந்த முதலீட்டில், குறைந்த இடத்தை வைத்து மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பார்க்க வாய்ப்புள்ள தொழில்களைப் பற்றி இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம், கழிவிலிருந்து காசு முளைக்கும் காளான் வளர்ப்பு பற்றி பார்ப்போம். இன்றைக்கு இறக்கை கட்டி பறக்கும் இறைச்சியின் விலை, காளான் பக்கம் மக்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளது.
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் ஏற்ற தொழில் என்பதால் காளான் வளர்ப்பு வேகமாக பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் வீட்டுக்கு முன்பாக உள்ள காலியிடத்தில் காளான் வளர்த்துவரும் ஒரு இல்லத்தரசி காளான் வளர்ப்பு தொழில்நுட்பங்களை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
குறைந்த செலவில் குடிசை போதும்!
”காளான்ல சிப்பி காளான், பட்டன் காளான்னு ரெண்டு வகை இருக்கு. இதுல சிப்பி காளான்ல எந்த ரிஸ்க்கும் இல்ல; எல்லா இடத்துக்கும் ஏற்றது. இதுக்கு அதிக இடவசதி தேவையில்லை. 10-க்கு 10 அடி இடத்துலகூட வளர்த்துடலாம். இதுக்கான குடிசை அமைக்கவும் ரொம்ப செலவு செய்யத் தேவையில்லை. தென்னை, பனை, கோரைப்புல், நாணல், கரும்புத்தோகை, சோளத்தட்டைன்னு நமக்குப் பக்கத்துல எது குறைஞ்ச விலையில கிடைக்கிறதோ, அதை வெச்சு குடிசை போட்டுக்கலாம். ஏற்கெனவே பயன்பாட்டுல இல்லாத குடிசைகள் இருந்தா, அதைக்கூட பயன்படுத்திக்கலாம். பொதுவா 20 அடி நீளம், 10 அடி அகலம், 6 அடி உயரத்துல குடிசை அமைச்சுக்கணும். தரையில சிமென்ட் தளம் அமைச்சு, அதுக்கு மேல ஒரு அடி உசரத்துக்கு ஆத்து மணலை பரப்பிவிடணும். அப்பத்தான் குடிலுக்குள்ள ஒரே மாதிரியான ஈரப்பதத்தைப் பராமரிக்க முடியும். அதே மாதிரி குடிசைக்குள்ள நல்ல காத்தோட்டம் இருக்கணும். இல்லையின்னா கரியமில வாயுவோட அடர்த்தி அதிகமாகி காளானோட வளர்ச்சி பாதிக்கும்.
உறியைப் போல தொங்க விடணும்!
பொதுவா, 20-லிருந்து 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், காத்தோட ஈரப்பதம் 85 சதவிகிதத்துக்கும் குறையாமப் பார்த்துக்கணும். வெப்பநிலை அதிகரிச்சா, தண்ணி தெளிச்சு குறைச்சுக்கலாம். குடிசையோட பக்கவாட்டுல சணல் சாக்குகளை கட்டித் தொங்கவிட்டு, அதை அடிக்கடி நனைச்சுகிட்டே இருந்தால் ஈரப்பதம் ஒரே அளவுல இருக்கும். காளான் வளர்ப்பு குடில் தயாரானதும், அடுத்ததா காளான் உருளைகளை தயார் செய்யணும்.
எப்படித் தயார் செய்வது?
வைக்கோலை சின்ன சின்ன துண்டுகளா வெட்டி வேகவைச்சு உலர வெக்கணும். அதேபோல காளான் வித்துக்களையும், பிளாஸ்டிக் பையையும் வாங்கி வெச்சுக்கணும். (காளான் வளர்ப்புக்கென்றே பிளாஸ்டிக் பைகள் கடைகளில் கிடைக்கின்றன) இந்த பிளாஸ்டிக் பையில் ஒரு சுற்று வைக்கோல், அதற்கு மேல் பரவலாக விதை, மறுபடியும் வைக்கோல், விதைன்னு மாத்தி மாத்தி போட்டு உருளையை தயார் செய்யணும். ஒரு உருளை தயார் செய்ய 200 கிராம் விதைப்புட்டி, 3 கிலோ வைக்கோல் தேவைப்படும். உருளைகளை தயார் செஞ்சதும், நல்லா இறுக்கமா கட்டி, குடிசைக்குள்ள உறியை தொங்கவிடுற மாதிரி தொங்கவிடணும். ஒரே கயித்துல 4 உருளைகள் வரைக்கும் தொங்கவிடலாம். நான் சொன்ன அளவுல குடிசை போட்டா, 450 உருளைகள் வரைக்கும் தொங்கவிடலாம். ஆனா, இந்த 450 உருளையும் ஒரே நாள்ல தயார் செஞ்சிடக்கூடாது. தினமும் 10 உருளைகளா தயார் செய்றதுதான் நல்லது.
25 நாளில் அறுவடை!
உருளைகளை தயார் செஞ்சு முடிச்சதும், விதைகள் இருக்கிற இடத்துக்கு நேரா பென்சில் அளவுக்கு ஒரு துளை போடணும். ஒரு உருளையில அதிகபட்சம் 12 துளைகளுக்கு மேல போடக்கூடாது. இதை செஞ்சதும் உருளையை கட்டி தொங்கவிடணும். 15 நாள்ல பூஞ்சாண இலைகள் உருளைக்குள் பரவ ஆரம்பிச்சு, முழுக்க வெள்ளை கலரா மாறிடும். அப்ப மேல்பக்கம் நனையிற மாதிரி தினமும் தண்ணி தெளிச்சுட்டு வரணும். 18-ல இருந்து 20-ம் நாளுக்குள்ள மொட்டு வரும். அதிலிருந்து 4 நாள்ல காளான் நல்லா மலர்ந்து முழு வளர்ச்சி அடைஞ்சிடும். அதை பறிச்சு சுத்தம் பண்ணி விக்கலாம்.
முதல் அறுவடைக்குப் பிறகு, படுகையின் மேல்பக்கத்துல சுரண்டி விட்டு தண்ணி தெளிச்சுட்டு வந்தா, அடுத்த 10 நாள்ல ரெண்டாவது தடவையாக காளானை அறுவடை செய்யலாம். எல்லா உருளைகள்ல இருந்தும் மொத்தமா ஒரு நாளைக்கு 3 முதல் 5 கிலோ காளான் கிடைக்கும். மாசத்துக்கு சராசரியா 100 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ காளானை 120 ரூபாய்க்கு விக்குறோம். உருளைகள் தயார் செய்யும் செலவெல்லாம் போக கணக்குப் போட்டுப் பார்த்தா, 450 உருளைகள் மூலம் ஒரு மாசத்துக்கு குறைஞ்சபட்சம் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறையாம வருமானம் பார்க்க முடியும். ஆரம்பத்துல ஒரு குடிசையைப் போட்டு காளான் வளர்க்க ஆரம்பிச்சோம். அக்கம் பக்கம் இருக்குறவங்களுக்கு அதைக் கொடுத்து பழக்கினோம். இப்ப மூணு குடிசை போட்டு வளர்க்கிறோம். அப்படியிருந்தும்கூட சப்ளை செய்ய முடியல. அந்தளவுக்கு கிராக்கி இருக்கு” என்றார்.
இடம் இருக்கு; நேரமும் இருக்கு என்று நினைக்கிற பெண்கள் குறைந்த முதலீட்டில் இதை செய்தால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் எளிதாக வருமானம் பார்க்கலாமே!
Help me...
ReplyDelete7373217200 this my number
Help me...
ReplyDelete7373217200 this my number